Saturday, November 12, 2011

‘சிறகு’ பள்ளியில் இளம்பிறை - ஒரு ரிப்போர்ட்



ஆதரவில்லாமல் தெருவில் கையேந்திப் பிழைக்க விடப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக 2003 ஆம் ஆண்டு 'சுயம்' எனும் தொண்டு நிறுவனம் தொடங்கிய பள்ளி - 'சிறகு'. அருகில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளிகளின் குழந்தைகளும் இந்தப் பள்ளியால் பயனடைகின்றனர். ஆவடியில் IAF காலனியையெல்லாம் தாண்டி இருக்கிறது இந்தப் பள்ளி. மொத்தம் 400 பேர் இங்கு கல்வி கற்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இளம்பிறையின் சார்பாக நாங்கள் சென்றது சனிக்கிழமையானதால், 120க்கும் குறைவாகவே குழந்தைகள் இருந்தனர். எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு, நண்பன் சுந்தர் வீட்டில் நாங்கள் 21 பேர் குழுமி, அவனது அம்மா செய்து வைத்திருந்த அருமையான வெஜிடபிள் பிரியாணியை அவசரவசரமாக சுவைத்து விட்டு, அந்தப் பள்ளிக்குச் செல்லவே மதியம் மணி 1.30 ஆகிவிட்டது. அதற்குள் வேறொரு தொண்டு நிறுவனம் நடத்தும் ‘Weekly Feeding Program’ எனப்படும் இலவச மதிய உணவு வழங்குதல் முடிவடைந்து, 4கிலிருந்து 13 வயது வரையிலுள்ள சுமார் 120 குழந்தைகள் அங்கே குழுமியிருந்தனர். அக்குழந்தைகளைப் பார்த்தவுடன் அவர்களது நிலை நமக்குப் புரிந்துவிடுகிறது. அதைப் பற்றி விபரமாக பின் வரும் பத்திகளில் கூறுகிறேன். 

அந்தப் பள்ளியின் நிர்வாகி ‘Binnish’ எங்களை வரவேற்று நிகழ்ச்சிகளை தொடங்க ஏற்பாடுகள் செய்தார். மொத்தம் 8 அறைகள் இந்தப் பள்ளியில் இருக்கிறது. அதில் 5 அறைகள் மிகவும் பழைய நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மூன்று அறைகள் புதிதாக கட்டியிருக்கிறார்கள். எந்த அறையிலும் கரும்பலகை என்ற ஒன்று இருந்ததாக நினைவில் இல்லை. சுவற்றிலேயே ‘சாக்பீஸ்’ கொண்டு எழுதியிருந்தார்கள். மான்டிஸோரி டைப் பள்ளியென்பதால் கரும்பலகை உதவியில்லாமல் ‘சார்ட்’ முறையில் பாடம் நடத்துகிறார்கள்.

முதல் 10 நிமிடத்தில் அடுத்த 150 நிமிடத்தை இந்தப் பள்ளியில் எப்படி பயனுள்ளதாகக் கழிக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்தோம். அனைவருமே சிறுவர்கள் என்பதால் எங்களால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் அவர்களுடன் பழகி, நட்பாகிவிட்டால் அனைத்தும் சுலபம் என்று நினைத்துக்கொண்டு ஆயத்தமானோம். மதியமாதலால் வெயில் வேறு கொளுத்தியெடுத்துக் கொண்டிருந்தது   காரிடாரில் குழந்தைகள் வரிசையாகக் குழுமியிருக்க, கடவுள் வாழ்த்துப் பாடலுடன் இனிதே ஆரம்பித்தோம். தியான முறையில் அமர்ந்து அவர்கள் சொன்ன மந்திரங்கள் முடிய 10 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொண்டது. நிலையான கடவுள் வாழ்த்து என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் நல்லது தான். மதசார்பற்ற முறை எங்களை மகிழ்விக்கவே செய்த்தது.

குழந்தைகளை 6 குழுவாகப் பிரித்து குழுவிற்கு எங்களிலிருந்து இரண்டு பேர் விதம், அங்கிருந்த அறைகளை ஆக்கிரமித்துக் கொண்டோம். முதலில் ஒவ்வொரு குழுவிற்கும் கையில் ஒரு வெள்ளைச் 'சார்ட்'டைக் கொடுத்து அவர்கள் குழுவிற்கு பொருத்தமாக பெயர்கள் வைக்கச் சொன்னோம். குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கு அளவேயில்லை என்பதை இதன் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். “ராக்கெட் ராஜா”வில் ஆரம்பித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரை கூற, கடைசியாக 6 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, முறைப்படி மற்ற அணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அந்தப் பெயர்களும், பெயர்க் காரணமும் பின் வருமாறு,

1) Cheetah - அதன் வேகத்திற்காக இந்தப் பெயரைத் தேர்வு செய்ததாகச் சொன்னார்கள்.

2) Ben 12 - 12 பேர் கொண்ட குழு என்பதால் இந்தப் பெயர். அதே போல் Ben10 மக்களைக் காப்பாற்றுவது போல் இவர்களும் நன்றாக படித்து ஏழை மக்களை காப்பாற்றுவார்களாம்.

3) சிறகு குட்டி ஜப்பான் - குட்டி ஜப்பான் என்பது அவர்களது பள்ளியின் கராத்தே க்ரூப் பெயராம்!

4) பதுங்கும் டிராகன், பாயும் புலி - இந்தப் பெயர் வைத்ததற்கு பெரிதாக ஒரு கதையை அவிழ்த்து விட்டார்கள். அதில் நினைவிலிருப்பது நமது தேசிய விலங்கான புலி, நம் நாட்டில் குறைவாக இருக்கிறது. அதை உணர்த்தவே இந்தப் பெயர் என்று ஒரு சிறுவன் சொன்னது

5) Dhoni - உலக்கோப்பையில் இந்தியா எப்படியும் ‘கப்’ அடிக்க வேண்டும் என்ற வெறியினால் இந்தப் பெயராம்!

6) கருணை இல்லம் - அனைத்து உயிரினங்களிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பெயராம்!


பெயர் வைக்கும் வைபவம் நடந்து முடிந்த பின் ‘ஓவியப்போட்டி’ ஆரம்பமானது. எல்லோருக்கும் ஒரு பென்சில், ஒரு குழுவிற்கு மூன்று கலர் பென்சில் டப்பாக்கள், மூன்று அழிப்பான் (Eraser / Rubber) கொடுக்கப்பட்டது. “இதைத்தான் வரைய வேண்டும் என்றில்லை எதை வேண்டுமானாலும் வரையலாம்” என்று சொன்னதால் அந்தக் குழந்தைகளின் கற்பனைத்திறன் எல்லை கடந்து ஓடியது. ‘தேசியக்கொடி’ வழக்கம்போல் இந்தப் பள்ளியிலும் நிறைய வரையப்பட்டது. வீடு, பூந்தொட்டி, இயற்கைக்காட்சி, தேவதை, முட்டையிடும் கடல் ஆமை(!), கிங் ஃபிஷெர் பறவை (நாங்கள் கொடுத்த கலர் பெசில் அட்டைப்படத்தைப் பார்த்து பலர் இதை வரைந்திருந்தனர்), ஒட்டகச்சிவிங்கியாகவும், டினோசராகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மிருகம், திசை காட்டும் காம்பஸ் (!) என்று பல விதமாக வரைந்து தள்ளிவிட்டனர். கடைசியில் பரிசு கொடுப்பதற்காக இந்தப் படங்களைப் பிரிக்க நாங்காள் பெரிதும் சிரமப்பட்டோம். ஓவியப் போட்டியின் போது இரண்டு சிறுமிகள் சாக்லேட் கொடுத்தால்தான் வரைவேன் என்று அடம்பிடிக்க, “சரி முதலில் வரைந்து முடி, தருகிறோம்” என்று சொன்னோம். ஒரு சிறுமி சரியென்று ஆவலாக தலையை ஆட்டி வரைய ஆரம்பிக்க, மற்றொரு சிறுமியோ எனக்கு ரெண்டு சாக்லெட் கொடுத்தால் தான் வரைவேன் என்று டிமேன்ட்ஸை ஏற்றி விட்டது. இரண்டு சாக்லெட்டை வாங்கிக்கொண்டு தான் வரைய ஆரம்பித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்
ஓவியப் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தான் கவனித்தோம். இரு சிறுவர்கள் எந்த குழுவிலும் இல்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். “என்னடா?” என்று பிடித்துக் கேட்டால் “எங்களுக்கு அம்மை போட்டிருக்கிறது” என்று தழும்பைக் காட்டுகிறார்கள். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. அந்தச் சிறுவர்களை அமைதியாக ஒரு இடத்தில் அமர வைக்கலாம் என்றால் அவர்கள் கேட்பதாக இல்லை. அப்பொழுதுதான் கவனித்தோம் - அந்தப் பள்ளியில் வேலை செய்யும் யாரையும் காணவில்லை. குழந்தைகளை எங்களிடம் விட்டு விட்டு அவர்கள் ஒரு அறையில் ஒதுங்கிக்கொண்டார்கள். Cheetah குழுவிலிருந்த ஒரு மூன்று வயது சிறுவனுக்கோ இருமல் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கிறது. கண்ணிலும், மூக்கிலும் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது. இருமிக்கொண்டே தான் வரைந்த படத்திற்கு கலர் அடிக்கமுடியாமல், கலர் பென்சிலை வைத்துக் கிறுக்கிக் கொண்டிருந்தான்.

படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்
போட்டோ எடுத்துக் கொண்டே வரும்போது தான் கவனித்தோம், ஒரு சிறுவனுக்கு காலில் பெரிய, ஆராத காயம் ஒன்று இருந்தது. ஆனால் அவன் அதை பொருட்படுத்தவேயில்லை. வரைவதிலேயே கண்ணாக இருந்தான். மற்றுமொரு சிறுவனுக்கு பின்மண்டையில் அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்தது. முதலில் ஒருவன் தள்ளிவிட்டு கீழே விழுந்ததால் அடி என்றான் ஆனால் விசாரித்ததில் தான் தெரிந்தது அவனது பெற்றோர் அடித்ததால் ஏற்பட்ட காயமாம். எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் பல சிறுவர்களுக்கு உடலெங்கும் சின்னச் சின்னக் காயங்கள், முதுகு முழுவதும் உடைந்த பருக்கள், வாயில் எச்சில் புண்கள், தேமல், அழுக்கு என்று நாங்கள் பார்த்த யாருமே உடல்ரீதியாக நலமாக இல்லை.

ஓவியப் போட்டி முடிந்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைப்பு வழங்கப்பட்டது. அந்தத் தலைப்பிற்கேற்ப அவர்களை தயார் செய்தனர் நண்பர்கள். நடுநடுவே காந்தி, நேரு, அம்பேத்கார், பகத் சிங், நேத்தாஜி, கல்பன சாவ்லா, சச்சின் போன்ற பிரபலங்களை அடையாலம் காணும் போட்டியும் நடந்தது. எந்தப் படத்தைக் காட்டினாலும் அம்பேத்கர் என்றே சொல்லி ஒரு வழியாக சாக்லெட்டை வாங்கிய சிறுவனை மறக்கவே முடியாது. நாங்கள் இந்த முறை செய்த மாபெரும் தவறே "சாக்லேட்" தான். பல சிறுவர்கள் "அண்ணா அண்ணா" என்று பின்னடியே வந்ததும், சிலர் அழுக ஆரம்பித்ததும், ஒரு சிறுமியோ மொட்டை வெயிலில் கிரவுண்டில் படுத்தபடி "சாக்லேட் வேணும்; கொடுக்கவில்லையென்றால் வர மாட்டேன்" என்று அடம்பிடித்ததும்... யப்பா, சமாளிப்பதற்குள் பெரும் பாடாகி விட்டது. அதிலும் ஒரு பொடியன் நாங்கள் இறுதியாகக் கிளம்பும் போது என் வயிற்றில் ஒரு குத்து குத்தி "எனக்கு அந்த பெரிய சாக்லேட் தந்தியா?" என்று கேட்டான்.  

கடைசி ஒரு மணி நேரம் தாங்கள் இதுவரை கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு ஒவ்வொரு குழுவாக வந்து விளக்கிக் காட்டினார்கள். சில சிறுமிகள் அருமையாக பாடிக்கொண்டே நடனமாடினர். ப்ளாஸ்டிக் ஏன் உபயோகிக்கக்கூடாது என்று ஒரு சிறுவன் சொன்னது இன்னமும் என் நினைவில் நிற்கிறது. சென்னை வழக்கு தமிழில் அவ்வளவு விளாவாரியாக யாருமே இதுவரை ப்ளாஸ்டிக்கின் தீமைகளைச் சொன்னதில்லை. ஒருவழியாக அனைவரையும் முக்கால் பாகமாவது திருப்திபடுத்திவிட்டு பரிசுகள் வழங்கினோம். அதிலும் சில குழந்தைகள் தங்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்று அழுகையைப் போட்டனர்.

இளம்பிறை சார்பாக இந்தப் பள்ளிக்கு மாதம் 2000ரூ - 3000ரூ வரையான மளிகை செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று தான் முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் இந்தப் பள்ளிக்கு சென்று வந்த பிறகு முதலில் இவர்களுக்கு மருத்துவ உதவிதான் தேவை என்று தோன்றுகிறது. ஒரே இடத்தில் ஒன்றுக்கொன்றாய் சிறுவர், சிறுமியர் வாழ்கின்றனர். தொற்று வியாதிகள் பரவும் அபாயம் அளவிற்கதிகமாயிருக்கிறது. கொஞ்சம் சுத்தமாக எந்த அழுக்கு அறிகுறியும் இல்லாமல் ஒரு சில குழந்தகள் இருக்கின்றார்கள். விசாரித்ததில் தான் தெரிந்தது அவர்கள் எல்லாம் இந்தப் பள்ளியில் வேலை செய்பவர்களது குழந்தைகளாம்! அவர்களை மட்டும் அவ்வபோது யாராவது ஒருவர் 'வாட்ச்' செய்துகொண்டிருப்பது போலவும் தோன்றியது. மூக்கிலும், கண்ணிலும் நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது, இறுமி இறுமி முகமே சிவந்து போய்விட்டது அந்தச் சிறுவனுக்கு. சுற்றிப் பார்த்தால் பள்ளி நிர்வாகிகள் யாரும் அருகில் இல்லை. அவர்களை தேடிக் கண்டுபிடித்து இந்த சிறுவனை ஒப்படைத்தால், அடுத்த ஐந்து நிமிடத்தில் மறுபடியும் இறுமிக்கொண்டே ஓடி வந்துவிடுகிறான். அவனைப் பிடித்து படுக்க வைக்க அங்கு ஆள் இல்லை! இளம்பிறை நண்பர்கள் தங்கள் மடியில் அந்தப் பயலைப் படுக்க வைத்தனர்...

எப்படியாவது ஒரு மருத்துவரைப் பிடித்து, மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் ஒன்றிற்கும், அவசர கால உதவிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே எங்கள் அனைவரது எண்ணமும். கண்முன்னே இத்தனைக் குழந்தைகள் உடல்நலக் குறையோடு இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. 'சிறகு' பள்ளி நிவாகிகள் சரியில்லை என்று சொல்லவரவில்லை. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள். ஆங்கிலம் வழியில் கல்வி கற்றுத் தருகிறார்கள், சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் திறன் அந்த மாணவர்களுக்கு இருக்கிறது, யோகா கற்றுத் தருகிறார்கள், கராத்தே கற்றுத் தருகிறார்கள், ஹிந்தி கூட கற்றுத் தருகிறார்கள் போலும். ஆனால், மிக முக்கியமான விஷயங்கள் பல இந்தப் பள்ளியில் இல்லை. சுத்தம், சுகாதாரம், நல்ல உடை, ஆரோக்கியமான உணவு, பகிர்ந்துண்ணும் பழக்கம் போன்றவை மிஸ்ஸிங்! பல குழந்தைகளிடம் பிடிவாதம் அதிகமிருக்கிறது. சில குழந்தைகளிடம் முரட்டுத்தனமும் அதிகமிருக்கிறது. மிக முக்கியமாக கையேந்தும் பழக்கத்தை பல குழந்தைகள் இன்னும் விடவில்லை. ஒரு நல்ல விஷயத்திற்காக இந்தப் பள்ளியை தொடங்கியவர்கள், முதலில் இந்தப் பழக்கத்தை இந்தக் குழந்தைகளிடமிருந்து முற்றிலுமாக அழித்திருக்க வேண்டாமா?

பொருள் ரீதியாக, பண ரீதியாக இந்தப் பள்ளிக்கு உதவிகள் தேவை. ஆனால் அதை விட முக்கியமாக மேற்சொன்ன விஷயங்கள் தேவை. 'சுயம்' கவனிக்க...

இளம்பிறையின் சார்பாக 'சிறகு' பள்ளிக்கு வந்த நண்பர்கள் சுந்தர், முத்துராம், ரம்யா ப்ரியா, கணேஷ், குருஷங்கர், குருராகவன், வேலு, நிர்மல், அருண், குணா, சுரேஷ், சதேஷ், ப்ரேம், பரமேஷ், சதீஷ், பாஸ்கர், திரு, ரவீந்திரன், சுப்ரமணி, சக்தி அனைவருக்கும் இளம்பிறையின் சார்பாக அன்பார்ந்த நன்றிகள்.

சென்னை ஆவடியிலோ அதன் அருகிலோ இருக்கும் மருத்துவர்கள் இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உதவ நினைத்தால் தயவு செய்து எங்களை ilampirai2010@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது தொலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்

- Pradeep-

No comments:

Post a Comment