அன்பிற்குரிய பதிவுலக நண்பர்களுக்கு...
புத்தாண்டு தொடங்கி இருபது நாட்களுக்கு மேலாகியும் என்னால் பதிவுலகம் பக்கம் வர முடியாததற்கு பல காரணங்கள். பல நாட்கள் கம்பெனியில் சரியான ப்ராஜெக்ட் இல்லாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்தேன். இப்போது தான் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. கொடுமையிலும் கொடுமை வேலையிலிருக்கும் போது வேலையில்லாமல் சும்மா இருப்பது. ஐ.டி கம்பெனிகளில் இது சர்வசாதாரணம் என்றாலும், தினம் காலையில் எழுந்து, ஐயர்ன் செய்த பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு ஆட்டோவில் கிளம்பிப் போய் சும்மா உட்கார்ந்திருப்பதென்பது, அனுபவித்தால் தான் அந்த கஷ்டம் தெரியும். ஆனால் இப்போது புதிய இடம், புதிய சூழலில் வேலை, முற்றிலும் புதிய மனிதர்கள் என்று ஓடிக்கொண்டிருப்பதால் பல விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் செய்யும் இந்த வேலையில் எனக்கு திருப்தியா என்று கேட்டால், இல்லை :) என் நண்பர்களில் பலரும் இந்தக் கேள்விக்கு இதே பதிலைத்தான் சொல்வார்கள். பலரும் சொல்லும் சாதாரண விஷயமாகப் போய்விட்டது இந்த 'செய்கிற வேலையில் திருப்தியில்லை' என்கிற விஷயம். ஆனால் நாங்கள் பலரைப் போல சொல்லிவிட்டு சும்மா இருந்து விடவில்லை. எங்களுக்கு பிடித்த வேலை ஒன்றை ஆரம்பித்து முயன்றவரை அனுபவித்து செய்து கொண்டிருக்கிறோம். அது தான் எங்கள் 'இளம்பிறை'...
இந்த ஆண்டின் முதல் பதிவு எங்கள் 'இளம்பிறை' பற்றியதாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது இளம்பிறையை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மே மாதம் சாதாரணமாக நண்பர்கள் மூன்று நான்கு பேர் பேச ஆரம்பித்து இப்போது ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு தொண்டு நிறுவனம் தான் 'இளம்பிறை'. படிக்க வழியில்லாம கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு விடிவெள்ளி தான் இந்த 'இளம்பிறை'. நன்றாகப் படிக்கக்கூடிய, புத்திசாலிக் குழந்தைகள் இன்னும் நம் நாட்டில் பலர் இருக்கின்றனர். சரியான பள்ளிக்கூடம், திறமையான ஆசிரியர்கள், பாதுகாப்பான சூழல், வேண்டிய உபகரணங்கள் என்று எதுவுமே இல்லாமல் நமது அடுத்த தலைமுறை ஏங்கி நிற்கும் போது, நம் நாடு இன்னும் பல வருடங்களுக்கு 'முன்னேரும்' நாடாகவே இருந்து விடுமோ என்று பயப்படத் தோன்றுகிறது. நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று தெரிந்த, தெரியாத நணபர்கள் மட்டும் எங்களை நம்பிக் கொடுத்தப் பணத்தை வைத்து இதுவரை எங்களால் முடிந்த அளவிற்கு கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகள் மற்றும் சிறார் தங்கும் விடுதிகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான முகாமிற்கு சென்று அவர்களுக்கு வேண்டியதை, எங்களால் முடிந்ததைச் செய்து கொடுத்தோம். இதோ இந்த வாரம் துவாக்குடியில் உள்ள அரசுப் பள்ளிக்கு செல்லப்போகிறோம். அந்தப் பள்ளியின் நிலைமை, ஐயோ கொடுமை! ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழலில் சம்பாத்தித்த பணத்தில் எச்சிக்கையில் காக்கையை விரட்டுவது போல இரு பருக்கைகளை உதிர விட்டிருந்தாலும் இந்தத் தளிர்களின் நிலை இந்நேரம் பன்மடங்கு உயர்ந்திருக்கும்.
இல்லாதவர்கௌக்கு உதவுகிறோம் என்று சொன்னவுடன் பாராட்டுவதற்கும் தட்டிக்கொடுக்கவும் பல பேர் வந்தனர். ஆனால் பத்து பைசாவாவது கொடுங்கள் என்று கேட்ட போது அதில் பலர் எட்டிப்போய் பக்கத்திலேகூட வரவில்லை. ஆனாலும் சர்காரில் பதிவு செய்யாமலேயே எங்களை நம்பி நேற்றைய தேதி வரை எங்கள் நண்பர்கள் மட்டும் கொடுத்திருந்த பணம் ரூபாய் ஒரு பெரிய தொகையைத் தாண்டி விட்டது. இதோ இன்று நாங்கள் வெற்றிகரமாக இளம்பிறையை பதிவும் செய்துவிட்டோம் (எல்லாம் சரியாக இருந்தும் ரூ1700 'அன்பளிப்பாக' கொடுக்கவேண்டியிருந்தது வேறு கதை).
இத்தனை இளம்பிறையை பதிவுலகில் அறிமுகப்படுத்தாமலிருந்ததற்குக் காரணமும் பதிவு செய்யாமல் இருந்தது தான். ஆனால் இப்போது நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். உங்களது பணத்திற்கு முழு உத்திரவாதம் உண்டு. நமது அடுத்த தலைமுறையை முன்னேற்றி நாம் தலை நிமிர, இதைப் படித்துக்கொண்டிருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களையும் எங்களுடன் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாங்கள் இதுவரை செய்துள்ள பணிகளைப் பற்றி நீங்கள் எங்களது தளத்தில் தெரிந்து கொள்ளாலாம். எங்களது தள முகவரிwww.ilampirai.org.
எங்களது மின்னஞல் முகவரி ilampirai2010@gmail.com.
புகைப்படங்களுக்கு http://picasaweb.google.com/Ilampirai2010
எங்களது பேஸ்புக் தளம் - http://www.facebook.com/Ilampirai2010
வாருங்கள் இணைந்து நம் அடுத்த தலைமுறையை உயர்த்துவோம்... அனுபவித்து ஒரு திருப்தியான வாழ்கையை வாழ்வோம்...
Written By Pradeep
No comments:
Post a Comment