எங்களது ‘இளம்பிறை’ அறக்கட்டளையை பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அதை பார்த்து எங்களைத் தொடர்ப்பு கொண்ட நண்பர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு முதலில் எங்களது நன்றிகள்.
இளம்பிறை அறக்கட்டளையின் மூலம் நாங்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து எங்களால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களுக்குச் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ஆவடியில் அமைந்துள்ள ‘சிறகு’ என்னும் பள்ளிக்கு இளம்பிறையின் சார்பாக நாங்கள் உதவ இருக்கிறோம். இந்தப் பள்ளி 2003 ஆம் ஆண்டு ‘சுயம்’ என்னும் அறக்கட்டளையால் நிறுவப்பட்டதாகும். இந்தப் பள்ளி நிறுவப்பட்டதன் முக்கிய காரணமே, பெற்றோர்களால் பிச்சைக்காரர்களாக விடப்பட்ட ஏராளமான ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத் தான். அருகில் உள்ள பொருளாதார வசதியில் மிகவும் குறைந்த 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு இலவச கல்விப்பயன் அடைகிறார்கள்.
பெற்றோர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து 150க்கும் அதிகமான, வீதியில் பிச்சை எடுக்க விடப்பட்ட குழந்தைகள் இந்தப் பள்ளியிலேயே தங்கியிருந்து பெரும் பயனடைகின்றனர். இவர்களுக்கு இலவசக் கல்வியுடன் சேர்த்து, உண்ண உணவு, இருக்க இடம் என்று அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளிநாட்களில் அனைவருக்குமே மதிய உணவும் வழங்கப்படுகிறது. பல்வேறு இடங்களிலிருந்து பல உதவிகள் இந்தப் பள்ளிக்கு வந்தாலும், 400 குழந்தைகளுக்கு மேல் என்பதால் இவர்களால் பல செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்பதை நாங்காள் அறிந்து கொண்டோம். அதனால் இளம்பிறையின் சார்பாக, மாத மளிகைச் செலவை மட்டுமாவது ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.
அதன் பொருட்டு வரும் சனிக்கிழமையன்று (19 March 2011) மதியம் 01 மணிக்கு மேல் இந்தப் பள்ளிக்கு நாங்கள் செல்கிறோம். அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டியில் ஆரம்பித்து பல்வேறு போட்டிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும், அறிவுசார் நிகழ்ச்சிகளையும் ஏராளமான பரிசுகளோடு நடத்த இருக்கிறோம். அந்தப் பள்ளியை நடத்தி வரும் ‘சுயம்’ அறக்கட்டளையினருடனும் விவாதிக்க உள்ளோம்.
பதிவுலக நண்பர்களும் இளம்பிறையின் இந்த முயற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தாழ்வன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கலந்து கொள்ளா விரும்பினால்ilampirai2010@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மடலிடவும். மறக்காமல் உங்களது தொலைபேசி எண்ணையும் குறிப்பிடவும். நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைச் சொல்கிறோம்.
என்றும் பதிவுலகின் ஆதரவும், அன்பும் எங்களுக்குத் தேவை.
No comments:
Post a Comment